அன்னமே நீ எங்கே சென்றாய்? – Delhi Poetry Slam

அன்னமே நீ எங்கே சென்றாய்?

By Vasuki R

நீ எழுந்தால் தானே எனக்கு காலைகள் வரும்..
நீ படுக்கை விரித்தால் தானே எனக்கு இரவுகள் வரும் ..

இட்லியா தோசையா என இனி யார் கேட்பார்?
பச்சை சட்டை வேண்டாம் , இந்த வெள்ளை சட்டை போடுங்கள் என இனி யார் சொல்வார் ?

பொங்கல் அன்று ,நீ வண்ண வண்ணமாய் கோலமிட வாங்கிய ‘கலர் பொடி’ 
மழை நீர் வடிந்து இறுகிக் கிடக்கின்றது.. 

உன்னோட மட்டுமே பேசும் எனக்கு , அருகில் நீ இல்லாமல் 
கண்ணீர் கேட்பாரற்று கன்னத்தோடு காய்ந்திருக்கின்றது.. 

உன் கைபிடித்து நடந்தால் பேரறியா ஊருக்கு கூட சென்று விடுவேன் ..
அருகில் தான் இட்லி கடை ,எழுந்து செல்ல மனம் வரவில்லை..

இன்னும் எத்தனை நாள் உன் சேலைகளில் உன் வாசம் இருக்கும்.. 
இன்னும் எத்தனை நாள் உன் மூச்சு இருந்த வீட்டுக் காற்றில் இருக்கும்.. 

கடைசியாக உன் கால்களை பற்றிய இருக்கம் என் கைகளில் இன்னும் இருக்கின்றது ..
உன் நெற்றியில் இட்ட முத்தம் என் உதடுகளில் இன்னும் இருக்கின்றது.. 

செடிக்கு நீரூற்ற வேண்டும், நாய்க்கு உணவு வைக்க வேண்டும் ..
உன்னைத் தவிர இன்னும் எத்தனை பேரை நான் பார்க்க வேண்டும்? 

ஒன்றோடு ஒன்றாக சென்று இருக்க வேண்டாம்.. 
எந்தன் பின் நீயாகவாது சென்றிருக்கக் கூடாதா?

இத்தனை கொலுவும் சுமங்கலி பூஜைகளும் 
நீ இவ்வளவு சீக்கிரம் சுமங்கலியாய் செல்லத்தானா?

இப்படி செய்திருக்கலாமோ அப்படி செய்திருக்கலாமோ என சிந்தித்து சிந்தித்து எனக்கு பைத்தியம் பிடிக்கின்றது.. 

சின்ன சின்னதாய் பெரிய பெரியதாய் மன்னிப்பு கேட்கவே ஆயிரம் இருக்கின்றது ..
உன்னையே விட்ட பாவத்திற்கு நான் எப்போது உன்னிடம் மன்னிப்பு கேட்பது ?

இது ஒரு கனவாக இருக்க கூடாதா?
வழக்கம் போல் நீ என் அருகிலேயே இருக்க கூடாதா?

மறுபடியும் ஒன்றும் அறியா குழந்தைப் போல் இருக்கின்றேன்..
அம்மா எங்கே ? அம்மா எங்கே ? என உனையே தேடுகின்றேன்..

அன்னமே நீ எங்கு சென்றாய்?


Leave a comment