By Vasanth Sukumar
மறுமையோ! மாயையோ!
போர்க்காயம் கண்ட மி்குவீரன்
பேரிடரில் அறுவை மேடையில்
குருதி தழுவிய தேகமது
இறுதி நெருங்கிய சுவாசமிது - அங்கே
மருத்துவன் முகக்கவசம் அணிந்து
அகக்கண் தெளிந்து
உயிர்வளி நூறுவீதம் கொடுத்து
ஊசியால் நாளம் துளைத்து
செந்நீரில் மயக்கமருந்தேற்றி
செவ்வனே வீரனின் வலியாற்ற
இவன் வசத்தில் அவன் சுவாசம்
இவன் கட்டுக்குள் அவன் அங்கம்
சதையறுக்கும் சிகிச்சையினால்
சேதங்கள் வலுவாகினதால்
இழையங்கள் இனி இழப்பதற்கொன்றுமில்லை
இருந்துமிவன் இயங்கியலை காக்க மறுக்கவில்லை
நாளம் வழி திரவங்கள்
காலமின்றி விரையுமிவன் கரங்கள்
செம்புனல் கொடுத்து மாற்றீடு – இவன்
செவ்விரலசைத்து உறுதிக்குறியீடு
சிரைவழி மருந்துகள் – திரைக்குப்பின்
இறைவழி வேண்டுதல்கள்
சுவாசித்து விழித்த அவன் கண்கள்
நேசித்து நெகிழ்ந்த உறவுகள்
முதல் மூச்சு கொடுப்பது நான்முகனோ?
கடைமூச்சு பறிப்பது காலனோ?
உயிர்சுவாசம் நிறுத்தி; தன் வசப்படுத்தி
உயிர்மீட்கச் செய்வது இவனோ!
சிற்றங்கீகாரம் பெறினும் – என்றுமிவன்
குறுநகை குறையாது முகக்கவச மறைவில்!
இவண் மயக்குனர்.....