By V Bala Meenak Rajesh
வாசலில் இருந்து பார்த்தாலே தெரியும் கொல்லை புறத்தின் பழைய கதவு...
தொடர் வண்டியின் பெட்டியைப் போல் நீண்ட பாதையை நடந்து கடப்பதே சுகம்..
கதவு திறக்க என்னை வரவேற்கும் என் உலகம்..
உபயோகமற்ற அக்காலத்து விலக்கறை..
அதன் வாயிலில் புதைந்த நிலையில் ஆட்டுரல்..
வேப்ப மரம் கிளை பரப்பி விரித்த நிழல்..
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நான் வளர்த்த குட்டிப் பூஞ் செடிகள்..
டிசம்பர் பூ.. கனகாம்பரம்.. சங்கு புஷ்பம்.. என வண்ண கலவையாய் நான் பார்த்து வளர்த்த மலர் சரங்கள்..
ஈரம் செரிந்த மண்ணில் பாதம் பதித்து நடக்கையில் தான் எத்தனை உவகை.. மலர் படுகை கடந்தால் அதோ..
நானும் ஓர் விவசாயி என்று சான்றுரைக்க... என் காய்கறி தோட்டம்.. தக்காளி.. மிளகாய்.. வெண்டை என குட்டிச் செடிகள்..
இவற்றிக்குப் பின்னே தான் என் உயிர் கலந்த மருதோன்றி..
அடர்ந்து கிளை பரப்பி எனை கவர்ந்து ஈர்க்கும் என் ஆசை சிவப்பரசி..
மற்றார் போலன்றி..
என் மருதோன்றியை ஒன்றொன்றாய் தான் கிள்ளி பறிப்பேன் நான் ..
பாவாடையை குழிவாய் பிடித்து இலை சேகரித்து.. சிதறாமல் அள்ளிச் சென்றால்..
அம்மா தோட்டத்து கல்லுரலினை சுத்தம் செய்து.. பாக்கும் புளியும் சேர்த்து அரைக்க துவங்குவாள்..
இலை நசுங்கையில் சாறின் மணம் நாசி நிறைக்கும்..
நளினமாய் அம்மாவின் கைவிரல்கள் தழைகளை தள்ள தள்ள.. அவள் கைவரலில் தோன்றும் ஆரஞ்சு வர்ணத்தில் மனம் குதூகலிக்கும்.. அரைத்த விழுதை சேகரித்து உள்ளே வந்த நொடி முதல் துவங்கும் இட்டுக் கொள்ள காத்திருக்கும் தருணம்..
அன்று மட்டும் அம்மாவின் அத்தனை ஆணைகளும் முதல் முறையிலேயே நடந்தேறும்..
அவளின் வேலைகள் முடிந்து புடவை தலைப்பில் கை துடைத்து அமர்ந்தவுடன் அவள் கைபிடித்து பார்த்துக்கேட்பேன்.. இதைவிட எனக்கு சிவக்கும்ல மா??..
சன்னப் புன்னகையாடு என் கைவிரலுக்கும் கால்களுக்குமாய் நான் கேட்கும் விதத்தில் மருதோன்றி கோலமிடுவாள் என் அம்மா.. முடிந்ததும் கையலம்பி தன் வாசனை கரத்தால் அவள் ஊட்டும் சாதம் அமிர்தம் தோற்கும் தேவாமிர்தம்..
அதன்பின்னே இட்ட மருதோன்று அழியாதவண்ணம் போர்த்தி விட்ட பின் வண்ண கனவுகளோடு உறங்கிப் போவேன் நான்..
காலை நான் எழும் முன்பே காய்ந்த மருதோன்றியை அகற்றி.. வண்ணம் நீடித்திருக்க தேங்காய் எண்ணை தடவியிருக்க.. எனை பெற்றவன் என் காலை கையிலெடுத்து.. உள்ளங் காலின் சிவப்பில் நாசி பொருத்தி.. பட்டாய் சிவந்திருக்கே என் குட்டிக் கால் என கன்னத்தோடு இழைக்க.. மீசை குத்துதுப்பா என சிணுங்கிக் கொண்டு..
என் அப்பனின் மடியிலேறி அவனின் பெரிய கரத்தில் என் குட்டிக் கை விரித்து வைத்து..
மருதோன்றி சிவப்பு கண்ணில் விரிய..
கன்னத்திலும் சிவப்பேர.. என் சிறுவயதின் அடையாளமாய்..
எப்போது வைத்தாலும் அந்த மீசை உறுத்தலை தேடித்தவிக்க வைக்கின்றது..
என் மருதோன்றி நினைவுகள்
உழவி