By Divya Jeevan

தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியிலே...!
ஏழைப்பட்ட ஜாதிக்கொரு ஈரமிருக்கு!
சாயம்போன வாழ்க்கையிலும் சாரம் இருக்கு.....
ஜக்கம்பட்டி கண்டாங்கி மேனி தாங்கி
உலாவும் பாவை அவள்!
வற்றா வளமும் வளரா இடமும்
அருகருகே முரணாக!
நாசியை நனைய வைத்த
தேங்காய் எண்ணெய் கலந்த வாசம்...! அவள்!
குடித்து குடல் வெந்து!
குடல் குழட்டி எடுத்த கள்ளசாராயம்!
அரை நிர்வாணமாய் அவிழ்ந்து கிடக்கும் வேட்டி...! அவன்!
அவளுக்கோ பிடிப்பில்லா மணமானது அவனுடன்!
இருள் கசியும் இரவு நேரமும் வந்தது
அனுதினமும் அணுசிதைவு போல் சிதைந்தால்
ஒவ்வொரு நடுநிசியிலும்!
புடைத்த நரம்பில் அடைத்த அணுவை
ஐந்து நொடியில் அவசரமாய் சிந்தி
அசந்துறங்கும் ஆணுக்கு என்ன வீண் செருக்கு!
பெருமழையின் முதல் துளி ஆணின் காமம் என்றால்!
அண்டமே அடங்கும் அவளின் அடிவயிற்று நெருப்பிற்க்கு!
என் கணவனுக்கு பொருப்பை தராதவன்
எனக்கு கருப்பை தராமல் இருக்கலாம்!
மது உண்டு மாது கண்டு மண்ணோடு மாண்டான் அம்மானிடன்!
அவளோ! ஏரியாவில் படரும் கண் மேய்ச்சல்களிலும்
உரக்க சிரித்தால் பாஞ்சாலியின் பேத்தியாம்
ஊமையாய் வாழ்ந்துவிட்டால் ஊருக்கே உத்தமமாம்!
கையில்லா ரவிக்கையும்!
உதட்டுச் சாயமும், வேசிமகள் வேசமாம்
குறிப்பெடுத்த சமூகத்தின் சாடலில் அவள் வாழ்ந்தால்!
மறுமணப் பேச்சு!
அது ஆண்களுக்கு அவசியம்
பெண்களுக்கு அது ஆண் ஆசையாம்!
நாதி கெட்ட நாகரீகம் நாசமாய் போகட்டும்!
அச்சம் என்னும் தடைக்கல்லை துச்சம் என எண்ணி மைல்கல்லாக்கினால்!
சீர்வரிசை வைத்து
சீராட்டிய என் தென்கிழக்கு
தேவதையோ
முற்போக்கு தோழியானால்
இச்சமூகத்தில்!!!!!!!!!!!!!!!!!!!