By Sai Madhumathi

கடந்தால் திரும்புவதில்லை
திடமான இளமையது..
காலங்கள் நிற்பதில்லை
மனமது திருந்தும் வரை...
நிலவும் தேயலாம்
நினைவலை ஓய்வதில்லை..
நேற்றைய சம்பவம்
இன்றைய அனுபவம்..
முடிந்ததை எண்ணி
வருந்தும் மானிடா
இன்று விடிந்ததை
நினைத்து மகிழாயோ..
எண்ணிப் பார்
இகபர சுகம் துறந்து
கானகம் சேர்ந்த சீதை யவள்
அற்ப மான் பின்னே மதிமயங்கி
விதியிடம் சதியுற்றளே..
சத்தியவான் அரிச்சந்திரன்
அறியா சோதனையா?
உத்தமப் புத்திரர்
பாண்டவர் காணா வனவாசமா
இதனால் நின்றது
அவர் சுவாசமா?
துணிந்து நின்றவர்கள்
ஜகம் வென்றிட வில்லையா?
விதி செய்யும் விமர்சனம்
கர்ம வினையின் நிதர்சனம்.
நீரோடையாய் பயணம் செய்..
நிகழ்ந்ததை எண்ணி வருந்தாதே
தோய்வு நிலை உனக்குப் பொருந்தாதே..
மனம் வருந்தும் போது,
வரலாற்றை திருப்பிப் பார்..
வழியது தானாய்ப் பிறக்கும்..
நிழலை வெட்டுவதால்
மரம் தான் சாயுமோ?
சோதனைகள் தொடர்ந்தாலும்
உன் தன்னம்பிக்கை ஓயுமோ?
முதலில் உன்னை நீ நம்பு
துன்பங்கள் தவிடுபொடியாகும்..
தீவினை செய்யும் விதி கடந்தால்
உன் வாழ்வு வரலாறாகும்..!