என் அருமை தாய் ! – Delhi Poetry Slam

என் அருமை தாய் !

By Preethi N C

இன்று என்னை சுற்றி சுடரொளிமயம் 
இன்பமென்னும் நெய்யிட்டு
அன்பு என்னும் திரி கொண்டு
என் வாழ்வினை ஏற்றி வைத்தாய் !

இன்னல் என்ற மின்னல் வெட்டியபோது
அதை கண்டு கலங்குவது பேதைமை என்று
வல்லமை உரைத்து இருளகற்றி தெளியவைத்தாய் !

உழைப்பாளிக்கு வெற்றியென்பது தூரமில்லை
தோல்வியென்பது துயரமில்லை
கற்று கொண்ட அனைத்தும் நம் வாழ்வு 
மலரவுதவுமென அறியவைத்தாய் !

கண்ணீருடன் தேய்ந்து நின்றால் ,மனம் தேற்றி,
முழுமதியாய் விளங்குமாறு துணை புரிந்தாய் !

நாம் இருவரும் வலிகளை பரிமாறினோம் - நானோ 
நீ தந்த வலியினால் (வலிமையினால்) நற்கதி பெற்றேன் - நீயோ 
நான் தந்த வலியினால் கதறியழுதாய் ! 

இப்பாவம் ஒழிய
என் விருப்பாலே உன் திருப்பாதம் வணங்கிடவே 
இக்கவி புனைந்து புகழாரம் அளித்து நின்றேன்!

நான் பெற்ற சுகமனைத்தும் 
என் குழவி அடைந்திடவே 
வழுவாத உன் நெறியில் என்றென்றும் வழி நடப்பேன் !

யாம் செய்த முற்பிறவி பயன் பொருட்டே
இப்புனிதமுறு உறவு பெற்றேன் - ஆம் 
அத்தகு இனியவளை 
இப்பாவில் ஐந்து முறை குறிப்பிட்டுள்ளேன் !

இன்று நான் ஒளி மிகுந்து காணப்பட்டாலும் 
நான் ஆதவனல்ல
என்றும் என்றென்றும் உன் ஆதரவு 
பெற்றொளிரும் முழுமதிதான் !


Leave a comment