By Nivetha Natarajan
காடுகள் அனைத்தும்
வீடுகள் ஆயின;
சோலைகள் அனைத்தும்
சாலைகள் ஆயின;
உணவுகள் அனைத்தும்
கனவுகள் ஆயின;
அதிகமான வெப்பநிலை
மனிதர்க்குப் பாவநிலை;
வெள்ளி போன்றது தண்ணீர்-அது
இன்றி வரும் கண்ணீர்;
மரகதம் போன்றவை மரங்கள்-அவை
இயற்கை அளித்த வரங்கள்;
தாய்ப்பால் தாயின் குருதி,
பூமியின் உதிரம் நதி;
தண்ணீரை வீணாய்ச் சிந்துகின்றாய்
பூமியின் குருதியை அழிக்கின்றாய்;
கொட்டிக் கிடக்கிறது இயற்கைச் செல்வம்-அதை
காக்க தேவையில்லைத் தவம்;
கோடாரியை தூர எறி;
மரம் வளர்க்க கொள்கை தறி !