By Subbulakshmi Sundaram
நிலாக் கதைகள்
அன்னை இடையில்
அழகாய் அமர்ந்து
அன்னம் அருந்த
பாலைப் பொழியும் அம்புலி!
கிண்கிணிச் சதங்கை
கால்களில் ஒலிக்க
உறவின் சத்தம்
விண்ணைத் துளைக்க
ஆச்சியின் வீட்டில் நிலவாய்ச் சோறு...!
விடுமுறை வெயிலில்
நட்புடன் அலைந்து
அந்தியில் சோர்ந்து
கதைகள் கதைக்க
அமுதைப் பொழியும் அழகுநிலா!
தொலைவில் தெரிந்து
கருமுகிலில் மறைந்து
பின்
தெளிந்த புனலில்
தன்
முகவரி தேடும் இரவின் சூரியன்!
நீண்ட கரையில்
புதைந்த கால்கள்
விரைந்து தொட்டு
விண்ணைச் சாடும்
அலைகள் பட்டு
குளித்த விண்துளி...!
ஓடும் வாழ்வில்
தொடரும் கனவாய்
தழுவும் தணலாய்
தணிக்கும் புனலாய்
காதலின் நினைவாய்
நலிந்து மீளும் வெண்பிறை...!
கால்கள் தளர
கண்கள் இடுங்க
வார்த்தை நடுங்க
தள்ளும் வயதில்
கொள்ளாத் துணையாய்
வாழ்வின் நிறையாய் முழுமதி!