நெருக்கம்! – Delhi Poetry Slam

நெருக்கம்!

By Jeyachandran R

புயல்மழை பெருக்கெடுத்து
வெள்ளமாய்ச் சீறுகிறது!

கூரைகள் பறந்தோட
சுவர்கள் கரைந்தோட
இடிந்துப்போன உள்ளங்கள் 
நொடித்துப்போன பள்ளியில்
நீட்டிக் குறுக்கிக் கிடக்கின்றனர்,
மேலெது, கீழெது என விளங்காமல்...... 

கையாலாகாக் கணவர் 
கைமீறிப் போனப் பிறகும்,
கைக்குழந்தை,கரையேறா மகள் காட்டி
தலையிலும் மாரிலும் 
மாறிமாறி அடித்துக்கொண்டு
மனையாள் வடிக்கும் கண்ணீரில்
மனம் இரணமாகி 
மூர்ச்சையானவர் முழிக்க
கூற்றுவனோடு முட்டி மோதுகின்றனர்,
ஓடோடி வந்த 
ஓய்வு பெற்ற மருத்துவர்கள்!

நேசக்கரங்கள் நீட்டி
செங்கல் அடுப்பு மூட்டி
நொடியில் திரட்டியதைக் கொட்டி
நீர் கூட்டி, பசி ஆற்றுகிறார்கள்,
பொதுநலத்தில் தன்னலம் தொலைத்த
சமூக சேவகர்கள்!

சிறுநீரும் கோமியமும் 
மலமும் சாணியும் கூடி 
குமட்டும் நாற்றம் ஓட்ட 
சேற்றை முத்தம் இடுகின்றனர்,
தொட்டால் தீட்டென விரட்டும் 
துப்புரவுப் பணியாளர்கள்!

கூர்கல்லாய், கிழிமுள்ளாய், 
கொடுக்குத் தேளாய், படப்பாம்பாய் 
விடம் விரவிய வெள்ளம் விலக்கி,
ஊனமுற்ற உற்றார்கள் மீட்க,
நட்டாற்றில் நடக்கின்றனர்,
கட்டற்ற காளைகள்!

மரஞ்செடிகொடிகளும் தம் பங்கிற்கு
இலைச்செறிவில் மழைத்துளிகளை
இயன்றவரை இழுத்துப் பிடிக்கின்றன;
வலுவான இழுவையையும் மீறி
வழுக்கி வழுக்கி விழுகின்றன,
மரக்கண்ணீர்த் துளிகள்!


Leave a comment