நல்ல வெயில் – Delhi Poetry Slam

நல்ல வெயில்

By Janaki R

நல்ல வெயில்
-நந்திதா(Nanthitha)

வேப்பமரத்தின் நிழலை வெயில் காட்டும்
காயும் வெயிலை குடையால் மறைத்து விட முடியாது
வெயில் அங்காளியா?
வெயில் பங்காளியா?

கூரை வீட்டில் இருந்தபோது
பனையோலை விசிறியே போதுமென இருந்தது
மாடி மேல மாடி கட்டினாலும்
மேல போய் எதையும் பார்க்க யாருக்கும் நேரமில்லை
ரூமுக்கு ஒரு குளுகுளு பெட்டி இல்லையென்றால்
பொழுது
வேக்காட்டில் வெந்து நாதியற்றுப் போகிறது
வெயில் அங்காளியா?
வெயில் பங்காளியா?

காக்கா கூட கண்ணுக்கு எட்டாத மொட்டை வெயிலில்
கஞ்சிவற்றல் மாங்காய் ஊறுகாய் போடலாம்
அறுப்பு முடிந்த கழனியில்
ஏரியும் காய்ந்து கிடப்பதால்
பிள்ளைகள் ஓடி ஆடி மின்மினிகளாய் கிரிக்கெட் விளையாடலாம்
எந்த நேரத்தில்
வீட்டுக்கு தூரமானாலும்
ஈரத் துணியை காய போடலாம்
கைப்பிள்ளைகளுக்குச் சளி தொந்தரவு குறைய
மருந்து புட்டிகளின் சேமிப்பை குறைக்கலாம்
புது செருப்பு போட்டு
எந்த தெருவிலும் நடக்கலாம்
தீஞ்சு போகும் வெயிலில்
செங்கல் சூளை தடையின்றி
ஊர் வம்பை பேசக் கேட்கலாம்
ஒவ்வொரு சிக்னலின் வளைவிலும்
ஊர்காரர் லாவகமாய் நுங்கு சீவ
அவர்களின் பாக்கெட்டிலும்
நாலு காசு தங்கும்
மழைக்கு ஆகாத தர்பூசணி மாட்டு வண்டியில்
கும்பலாய் உட்கார்ந்து தெருவெங்கும் கூச்சல் போடும்
பல் இளிக்கும் பங்குனி வெயிலில்
எங்கோ மூலையில் மூடி வைக்கப்பட்ட தேர்
நடுவழியில் நிற்க
நீர்மோரும் புளிச்சோறும்
போவோர் வருவோர் வாயில் விழ
கராராக நிறைவேற்றப்படும் வேண்டுதலை
வேடிக்கை பார்த்தபடி பெருமாளும் முருகனும்
கல்யாணகோலத்தில் வரவேற்பு கூட வானவேடிக்கையுடன்
சும்மா இருக்கும் மலையைச் சுற்றிவர காணலாம்
வெயில் அங்காளியா?
வெயில் பங்காளியா?

இப்போதெல்லாம் சூரியனைப் பார்த்து
எந்த நாயும் குறைப்பதில்லை
அது அது பாய்க் கடை வாசலில்
தூக்கிப் போடப்படும் கறிக்காக காத்துக்கிடக்கவே ஆசைப்படுகிறது
என்னதான் வெயில் உசுர வாங்குற பேயாட்டம் இருந்தாலும்
கத்திரியில் திடீர் மின்னல் பயமுறுத்துயே நிற்கும்
மழையின் நசநசப்பை விரும்பாதவர்கள்
வெயிலின் கசகசப்பை விரும்பமாட்டார்கள்
வெயில் அங்காளியா?
வெயில் பங்காளியா?


Dr.R.Janaki
Assistant professor of Tamil,
Faculty of Science and Humanities, SRM Institute of Science and Technology,
Vadapalani, Chennai-93


Leave a comment