விதைத்தது விளையும் – Delhi Poetry Slam

விதைத்தது விளையும்

By Dhivya Ramesh

கட்டவிழ்த்த கருப்பைகளில் 
மொட்டுகளை ஈன்றளித்து -  இன்று 
ஆறில் ஒருவனாக அகிலத்தில் நிற்கிறோம்.
என்பு தசை  உடலின்
இரைப்பையை நிரப்ப
 புகுத்தினோம் தொழில்நுட்பம் 
எழுப்பினோம் புரட்சியை  -  பசுமையாய் அறுபதுகளில்…
வித்தில் வீரியம் ,
நீரில் யூரியா ,
நிலமெல்லாம் பூத்தது -நாளை 
மலடாவோம்  என்றறியாமல் -இன்று 
விளைவிக்க வேற்று கிரகம் தேடும் விண்கலங்கள்…….

எத்தனை மிதித்திருப்போம் ,
எத்தனை அடித்திருப்போம்-
என்றும் பொறுப்பவளை 
இன்றும் விடவில்லை நாம்.
பூத்த உயிர்களுக்கெல்லாம் பங்கு கொடுத்துவிட்டு 
பாறைக் காட்டில் படுத்து உறங்குபவளை,
துடிதுடிக்கத் தீண்டி 
அனுமதியின்றி அங்கம் சிதைத்து, 
நம்முடல்  குடிகொள்ள
ஒப்பனை செய்தோம் – குடிலாக……
அங்கம் பறிபோன தடம் தெரிந்து 
காலனுடன்  வந்தாள் .
அதிர்ந்தது நிலம்….. 
உதிர்ந்தது உயிர்கள் …..
முன்னிரவில் கூடிக் குலவின குடும்பமாய் 
மறுகாலை உயிர்மூடி உலவின சடலமாய்
விதைத்ததே விளைந்தது!!!!!   (manmade landslides)

பெருத்த தொகையால் பருத்தது தேவை
உறிஞ்சினோம் நீரை – ஓட்டையிட்டு.
விதை ஒன்று போட 
வினை வேறு முளைக்காது,
இன்று வீடு வீடாய் 
பால்காரரோடு பெரும்பானை நீர்க்காரரும் வருகிறார் 
குடம் ஐந்து ரூபாயென அடைத்துத் தருகிறார்.

இருக்க இடம் கொடுத்தால் 
படுக்கப் பாய் கேட்குமாம் -ஆசை ஆவி,
உயிர் நீராக
இலை மலை உரசி 
இறங்கி வந்தவளை 
விஞ்ஞான விடமேற்றி 
வீதியில் விட்டோமே….
அவள் நிறம் மாறி 
குணம் மாறி 
மாற்றான் உடல் ஏறி 
ஊறிவிட்டாள் புற்றாக ………
இனி பிறக்கும் ஊற்றும் பொன்னிறமாகுமோ !!!!!
உதிரும் மழையும் ஊதாவாகுமோ !!!!!!
விதைத்ததே  விளையும்…….   (industrialisation-water pollution)

புண்ணிய கங்கையை 
புண்ணாக்கி நோகடித்தோம் -அவள் 
புனிதத்தைக் கற்பழித்தோம் .

வண்ணமீன் பார்த்து 
கொஞ்சிவிளையாடும் -அதிகார மான்கள் ,
வண்ணநீர் தொட்டு 
அஞ்சி மறைந்தோடும் –(சாய )நீரோடை மீன்கள்,
மனிதக்குற்றத்தை 
சாடிச் சாடிச் செத்துவிட்டது -
சரவணப்பொய்கையில் மீன்கள்,
மீனெங்கு  முறையிடும் 
மனுபோடத் தெரியாதே ……..
மாக்களுக்கு நீதி சொல்ல
மனுநீதிச் சோழனுமில்லையே ……….
நீலக்குறுக்கு நிறுவனத்திலும் கறுப்பு ஆடுகள்!!!!!!

ஆடம்பரங்கள் அவசியமானதாகி 
இயந்திரங்கள் அன்றாடமாகி 
வேதியியலையே வேதமாக ஏற்று 
விவேகப் பயணத்தில் பிஎஸ்6 மனிதன்.
 
கையொப்பம் அழகென்று தோன்றியதோ !!!! 
கை நீட்டிய இடமெல்லாம் -ஒப்பமிட்டது அதிகாரம் .
கரியைக் உமிழ்ந்தாலும் சான்றளிப்பு –
கைகளில் காந்தியோ பரிசளிப்பு ,
காற்று மண்டலமெல்லாம்
கானம்பாடித் திரிந்தது -அந்த 
நான்குகால் நரகம்,
வீதியில் வருவது கைக்குழந்தையோ- 
காலாவதியான பெருங்கிழமோ -
அதற்கென்ன கவலை………
அவர்களின் மூச்சை முத்தமிட்டு
மூச்சறையில் தாளமிட -கரிப்புகையை 
பரிசளிக்கும் வள்ளல்களின் வாகனமாயிற்றே அவன்.

விதைத்ததே விளைந்தது!!!!!
தலைநகரத்தை முடக்கினான் -தன் 
தசை நரகமான வாயு.     (severe air pollution)

வீட்டுச் சுவரின் பின்புறக் கடைக்கும்
வீதியின் சற்றே ஓரத்து முனைக்கும் 
நூறடி தூரத்து உறவினர் அறைக்கும் 
இருகால் இருந்தும் இயந்திர பயணம் 
உதிரத்தை பரிசுத்தமாக்கும் பிராணனே அதற்குப் பணயம் .

கையில் பையிருந்தும் நெகிழியில்  கட்டலாம்  
பொட்டலம் பிரித்ததும் வீதியில் கொட்டலாம் 
துப்புரவு செய்யும் முன் தூரத்தில் எரிக்கலாம் 
அடைந்திருக்கும் கூற்றுவனை ஆர்ப்பரித்து அழைக்கலாம்
நித்தம் குழல் சிறுத்து  நித்திரையில் இறக்கலாம்….
விதைத்ததே  விளையும்……

முள்ளை முள் எடுத்தது-
காற்றில் வந்திருக்கிறேன் 
என்றது கொரோனா ,
கதைவடைத்துக் கவசமிட்டேன் -
என்றோம் நாம்,
பிபிஎம் குறைந்தது -     
என்றது செய்தி …
தென்றலும் தூங்கியது
தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு………

நாளொரு மேனியும் 
பொழுதொரு வண்ணமுமா ய் - 
உயர்தரமானது நம் வாழ்க்கை- ஆனால் 
உயரத்தில் எதோ ஒரு ஓட்டை -அது 
ஓசோனில் நாம் செய்த சேட்டை…… 

நிலம் நீர் காற்றைக் கெடுத்து 
சுயசூனியம் வைத்திருக்கிறோம்…… 
அணையாக் கதிரவனை மட்டுமே 
இன்னும் அணைக்காமல் இருக்கிறோம் ….
விட்டகுறை தொட்டகுறையாக 
இருக்கட்டும் என்றல்ல , 
தொட்டால் சுட்டுவிடும்  என்பதால் 
தன்னில் விழுவதைத் தன்னுடலாக்கும் என்பதால்…….

ஸ்டாக் ஹோமில் ஆரம்பித்தோம் 
பாரிசில் கூடினோம் 
வியன்னாவில் விவாதித்தோம் 
கியாட்டோவில் கதைகதைத்தோம் 
சென்டாய் வரையரையை -மண்டையில் அரைத்தோம்…….
ஜெர்மனி- ஜெனிவா
பிரேசில்- மாஸ்கோ
மாநாடுகள் பலப்பல………
கடைசி கூத்து கட்டோவேஸில் ,
அறிக்கைகள் ஆயிரம் உண்டு 
அன்றாட வாழ்வில் மாற்றங்கள் ஏது ???
கட்டுரை கவிதை என,
ஓவியம் பாடல் என,
போட்டிகளில் மட்டுமே- “மாசுக்கட்டுப்பாடு”
மனித செய்கைக்கு கட்டுப்பாடு ??????

அதிநவீன வேளாண்மையின்
ஊட்டச்சத்து ஊக்குகளால் 
துளைத்துவிட்டோம் நிலமகளை ……

தங்கம் வாங்கினால் -தரமான மண் இலவசம்;
மண்புழு மூட்டை -ரூபாய் ஆயிரம்,
நல்ல மண் – மூட்டை முப்பதாயிரம் !!!!!!
இதுவும் நடந்திடும் ஒருநாள் …..
விதைத்தது விளையும் மறுநாள்……

உன் கரித்துண்டால் 
காயம்பட்ட மேகப்பொதி 
அமிலத்தை வீசும்;

போட்டித்தேர்வில் வென்றவனுக்கு,
பரிசு பத்துக்குடம் தண்ணீர்!!!!!!
இந்நிலை தூரமல்ல -நாம் 
அழுக்குச் சாயம் பூசி 
இயற்கையைச் சாகடித்தால்,
விதைத்தது விளையும்…..

இலவசமாய்க் கிடைக்கிறது -என்று 
ஏளனமாய் நினைக்காதே- பிறகு
காற்றுப் புட்டிகளை வாங்க -மாதந்தோறும் 
வீட்டுக் கணக்கெழுத வேண்டும் !!!!!!

ஐம்புலனோடு ஆசிர்வதிக்கப்பட்ட ஆறறிவே……. 
சூரியனிலிருந்து தெரித்து விழுந்தவள் 
மீண்டும் சுருண்டு மடிவதற்குள் 
திருத்திக்கொள் - புரண்ட தடத்தை;
மூச்செல்லாம் நஞ்சு படர்வதற்குள்
மூங்கில் காடெல்லாம் வெந்து தணிவதற்குள்
சுருட்டிக்கொள் சுயநலத்தை……
விதைத்தது விளையும்……….


Leave a comment