By Karthikeyan Swaminathan
சிலரோடு பேசப் பிடிக்கும்
சிலர் பேசிக் கேட்கப் பிடிக்கும்
சிலரோடு உண்ணப் பிடிக்கும்
சிலர் உண்ணப் பார்க்கப் பிடிக்கும்
சிலரோடு நடக்கப் பிடிக்கும்
சிலர் காலடியில் கிடக்கப் பிடிக்கும்
சிலரைத் தாங்கப் பிடிக்கும்
சிலருக்காக ஏங்கப் பிடிக்கும்
சிலர் தோளில் அழப் பிடிக்கும்
சிலர் மடியில் விழப் பிடிக்கும்
சிலரோடு மட்டுமே இருக்கப் பிடிக்கும்
மிகச்சிலருக்காகவே இறக்கவும் பிடிக்கும் !
யாரந்தச் சிலர் ....?
கன்னங்கள் தாங்குவதற்கு முன்
நம் கண்ணீரைத் தாங்குபவர்கள்
எப்போதும் எவ்வேளையும்
நம்முடன் இருக்கவே ஏங்குபவர்கள் !
நம் வெற்றிகளைத்
தன் வெற்றியாய் கொண்டாடுபவர்கள் !
காலில் தான் அடிபடுகிறது
இருந்தும் கண்கள் கலங்குகிறதே ...
அதுபோல நம் அன்புக்குரிய சிலர்
அள்ளி அணைக்க அருகில் இல்லாமல் போனாலும்
தள்ளி இருப்பதே விதியென்று ஆனாலும்
நம் பெயர் கேட்ட தருணம்
அவர் கண்கள் ஓரம்
மெல்ல வடியும் ஈரம்
சிலர் நம்மையும்
நாம் சிலரையும்
எண்ணும் நேரம் !!!
நாமில்லாமல் அவரில்லை
அவர்கள் இல்லாமல்
நாம் வாழ்வதில் பயனில்லை
நமக்குச் சிலர் சிலராய்
நாம் சிலருக்குச் சிலராய்
நகர்கிறது நம் வாழ்வு !
அனைவருக்கும் அமைவதில்லை இந்தச் சிலர் !
இந்தச் சிலரைத் தேடியும்
இந்தச் சிலருக்காக ஓடியும்
இந்தச் சிலரில்லாமல் வாடியும்
கடைசியில் ....
சிலருக்குச் சிலர் கிடைத்தும்
சிலருக்குச் சிலர் கிடைக்காமலும்
முடிந்து விடுகிறது
நாம் எடுத்த ஜனனம் !
பணத்தைத் தேடியும்
பதவிக்காக ஓடியும்
கோபத்தோடு பேசியும்
கடும் சொற்களை வீசியும்
உறவுகளைத் தொலைக்கிறோம் !
அது என்ன தான் விதியின் சதியோ
அனைவருக்கும் ...
காலம் போன பின் தான்
ஞானம் பிறக்கிறது !
இறந்த காலத்தை நினைத்து
நிகழ்காலத்தைத் தொலைத்து
வருங்காலத்தை எண்ணி வருந்துகிறோம் !
நமக்கென சிலர் அமைவது
காலத்தின் கையில் இல்லை
நம்முடைய உயர்ந்த பண்பில் இருக்கிறது
நாம் பிறர் மீது வைக்கும் அன்பில் இருக்கிறது
நட்பை உறவை மனதில் கொண்டு
நாளும் பொழுதும் இன்பப்படுவோம்
அரிதாய்க் கிடைத்த மனிதப்பிறவியில்
அன்பைப் பகிர்ந்து புனிதப்படுவோம் !